இலங்கையில் பிரபல ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்கிரமவின் வீட்டின் மீது வெள்ளை வானில் வந்த குழுவொன்றினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பிலியந்தலை பகுதியிலுள்ள அவரின் வீட்டுக்கு இன்று அதிகாலை சென்ற அடையாளம் தெரியாத குழுவினர் கற்கள் மற்றும் மலக் கழிவுகளை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இந்த சம்பவத்தின் போது வீட்டுக்கு முன்னால் துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள் கேட்டதாக சமுதித்த சமரவிக்கிரம பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியொன்றில் பணியாற்றும் இவர், அண்மைக் காலமாக பல்வேறு அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளிடம் சர்ச்சைக்குரிய கேள்விகளை எழுப்பி செய்திகளை வெளியிட்டு வந்துள்ளார்.
இதேவேளை இதற்கு முன்னர் தனக்கு தொலைபேசி மூலம் உயிர் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாக பொலிஸாரிடம் முறைப்பாடுகளையும் இவர் செய்திருந்தார்.
இவ்வாறான நிலையிலேயே தனது வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சமுதித்த சமரவிக்கிரம கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை நடத்தி வருகின்றன.