November 26, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொருளாதார நெருக்கடி தொடர்பில் எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை!

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எவ்வாறான தீர்வுகளை முன்வைப்பதென எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.

அந்த அறிக்கையில், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன், நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

பொருளாதார நெருக்கடியில் நாடு எதிர்கொண்டுள்ள பிரதான நான்கு சவால்கள் தொடர்பில் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள எதிர்க்கட்சியினர் அந்த சவால்களை வெற்றிக்கொள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு சவால்களில், 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து சர்வதேச முறிகளை விநியோகிப்பதனூடாக சர்வதேச சந்தையில் இலங்கைக்கு கடன் பெறுவதற்குள்ள சந்தர்ப்பம் இல்லாமற்போகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போது இலங்கையில் காணப்படும் வெளிநாட்டு கையிருப்பு ஒரு மாதத்திற்கான இறக்குமதிக்கும் போதாமல் உள்ளதெனவும், 2020 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் வருமானத்தில் 70 வீதம் கடனுக்கான வட்டியை செலுத்த வேண்டியேற்பட்டுள்ளதாகவும், கடந்த 2 வருடங்களில் மொத்த அரச கடனானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 95 வீதத்திற்கும் 125 வீதத்திற்கும் இடைப்பட்ட தொகையாக அதிகரித்துள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.