January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வவுனியா பல்கலைக்கழகம் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்த வவுனியா வளாகம், “வவுனியா பல்கலைக்கழகம்” என்ற பெயரில் தேசிய பல்கலைக்கழகமாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால்  இன்று திறந்துவைக்கப்பட்டது.

இதன்படி, இந்நாட்டின் 17ஆவது அரச பல்கலைக்கழகமாக “வவுனியா பல்கலைக்கழகம்” வரலாற்றில் இடம்பிடித்திருக்கிறது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த பிரயோக விஞ்ஞான பீடம், வர்த்தக பீடம் மற்றும் ஆங்கில மொழிப் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கிய வவுனியா வளாகம், 1997ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது.
இந்த வவுனியா வளாகத்தை தேசிய பல்கலைக்கழகமாக மாற்றுமாறு, மாணவர்கள் மற்றும் பேராசியர் குழாமினால் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இதனைக் கருத்திற்கொண்ட தற்போதைய அரசாங்கம், “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தின் பிரகாரம் உயர்க் கல்வியை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், விரிவுரை மண்டபங்கள், பீடங்களுக்கான கட்டிடங்கள், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய பல்கலைக்கழகமாக “வவுனியா பல்கலைக்கழகம்” அபிவிருத்தி செய்யப்பட்டது.

வவுனியா பல்கலைக்கழக விடுதி மைதானத்தில் கூடியிருந்த பிரதேசவாசிகள், நிகழ்வு இடம்பெற்ற இடத்துக்கு வருகை தந்த ஜனாதிபதியை அன்புடன் வரவேற்றனர்.

அவர்களுடன் சுமூகமாகக் கலந்துரையாடிய ஜனாதிபதி, அம்மக்களின் நலன் விசாரித்தறிந்தார்.

வவுனியா வளாகத்தை தேசிய பல்கலைக்கழகமாக மாற்றும் நிகழ்வைப் பதிவு செய்யும் நோக்கில் கல்வெட்டைத் திறைநீக்கம் செய்து திறந்துவைத்த ஜனாதிபதி, பல்கலைக்கழகத் தகவல் தொழில்நுட்ப மத்திய நிலையம் மற்றும் சகவாழ்வு மையம் போன்றவற்றை மாணவர் பாவனைக்குக் கையளித்தார்.