பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான சட்டமூலத்தை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தில் செய்யப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பான சட்டமூலம் கடந்த வாரத்தில் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த சட்டமூலத்தை அமைச்சர் பீரிஸ் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இதன்போது ஒழுங்குப் பிரச்சனைகளை முன்வைத்த எதிர்க்கட்சி உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர், தற்போதைய பயங்கரவாத தடைச் சட்டத்தை இல்லாமல் செய்து புதிய சட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நீதி அமைச்சர் தெரிவித்திருக்கையில், அதில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக எந்த வகையில் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது என்று கேள்வியெழுப்பினர்.
இவ்வேளையில் பதிலளித்த அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பாராளுமன்றத்தில் கலந்துரையாடுவதற்காகவே இதனை சபையில் சமர்பித்துள்ளேன் என்றும், இது தொடர்பான விவாத்தில் சகலரும் யோசனைகளை முன்வைக்கலாம் என்றும் கூறினார்.