November 23, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“அரசாங்கத்திற்கு எதிராக சூழ்ச்சி செய்கின்றனர்”: ஜனாதிபதி

பொதுமக்களைத் தவறாக வழிநடத்தி இந்நாட்டைப் பாதாளத்துக்குள் தள்ளிவிட, கடந்த ஆட்சியிலிருந்த சில குழுக்கள் மீண்டும் இணைந்துச் செயற்படுகின்றன என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  தெரிவித்துள்ளார்.

எவ்வாறான சவால்களை எதிர்கொள்ள நேரிட்டாலும், நாட்டையும் மக்களையும் பாதுகாக்கவும் தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுப் பேரணிகளின் “முதலாவது பொதுஜன பேரணி” நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில், அநுராதபுரம் சல்காது மைதானத்தில், இன்று பிற்பகல் இந்தப் பொதுக் கூட்டம் இடம்பெற்றது.

“சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தின் பிரகாரம், பெரும் சவால்களுக்கு மத்தியில் இந்த அரசாங்கம் அடைந்த இலக்குகள் தொடர்பில் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தும் நோக்கிலேயே, இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி, “மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு அன்று செயற்பட்டது போன்றே, தேசிய மற்றும் சர்வதேச சக்திகளுடன் இணைந்து தற்போதைய அரசாங்கத்தின் பயணத்தைத் தடுப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.

“அரசாங்கத்தின் கொள்கைத் திட்டங்கள், எதிர்காலச் சந்ததியினரின் நலனை இலக்கு வைத்தே முன்னெடுக்கப்படுகின்றன. அதனால், எவ்வாறான தடைகள் ஏற்படினும் தொடர்ந்து முன்னோக்கி நகர்வோம்” என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.