April 27, 2025 13:17:33

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் 11 இலட்சம் பேர் எந்தவொரு தடுப்பூசியையும் போட்டுக்கொள்ளவில்லை!

இலங்கையில் 20 வயதுக்கு மேற்பட்டோரில் 11 இலட்சத்து 70 ஆயிரம் பேர் எந்தவொரு கொவிட் தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட மதிப்பீட்டில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் எம்.எச்.எம். சித்ரானந்த தெரிவித்துள்ளார்.

இதன்படி 20 தொடக்கம் 29 வயதுக்கிடைப்பட்டவர்களில் 719,000 பேரும், 30 தொடக்கம் 60 வயதுக்கிடைப்பட்டவர்களில் 3 இலட்சத்து 86 ஆயிரத்து 408 பேரும் இதுவரை தடுப்பூசி பெற்றுக் கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.

இதேவேளை 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 64,234 பேர் எந்தவொரு தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவில்லை என்றும் எம்.எச்.எம். சித்ரானந்த தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் நாட்டில் ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு பின்னர் முழுமையாக கொவிட் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளாதவர்களை பொது இடங்களுக்கு அனுமதிக்காதிருப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் அண்மையில் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.