November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அத்தியாவசிய பொருட்கள் தொடர்பில் பஸில் தலைமையில் விசேட குழு!

சுங்கத் திணைக்களத்தின் வசமுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

சந்தையில் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாதிருப்பதை இலக்காகக் கொண்டு ஜனாதிபதியினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்காக நிதி அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ தலைமையில் புதிய குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

டொலர் நெருக்கடியால் கொழும்புத் துறைமுகத்தில் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் தேங்கியிருக்கும் இருக்கும் நிலையில் அது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டத்தின் போதே ஜனாதிபதி இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பண்டிகைக் காலத்தின் போது உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடின்றி பொதுமக்கள் கொள்வனவு செய்வதற்கான உரிய திட்டமிடல்களை வகுக்குமாறு ஜனாதிபதியினால் துறைசார் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

தெரிவுசெய்யப்பட்ட சில அத்தியாவசியப் பொருட்களின் கொள்வனவுக்கு சந்தர்ப்பம் வழங்குமாறும் இதன்போது குறுகிய எண்ணங்களுடன் அதிகமான பொருட்களை இறக்குமதி செய்வதற்கோ அல்லது பொருட்களை பதுக்கிவைப்பதற்கோ இடமளிக்கக் கூடாதெனவும் இதன்போது ஜனாதிபதி கூறியுள்ளார்.

உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை சந்தைக்கு விநியோகிப்பது தொடர்பில் முறையான பொறிமுறையொன்று உடனடியாக தயாரிக்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.