பயங்கரவாதத்தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.
புத்தளம் மேல் நீதிமன்றத்தினால் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்க மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், அது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா 2020 ஏப்ரல் 14 ஆம் திகதி குற்றப்புலனாய்வுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து 11 மாதங்களாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, 2021 பெப்ரவரி மாதத்தில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் தனக்கு பிணை கோரி புத்தளம் மேல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த போதும், அதனை நீதிமன்றம் நிராகரித்து வந்ததை தொடர்ந்து அவர் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.