January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கச்சத்தீவு திருவிழாவில் இந்திய பக்தர்களுக்கு அனுமதி!

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் இந்திய பக்தர்கள் கலந்துகொள்வதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழக முதலமைச்சரின் பிரதிநிதியிடம் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலினின் ஆலோசனையின்படி தன்னுடன் தொலைபேசியில் உரையாடிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதனை கூறியுள்ளதாக கடற்றொழில் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவிழாவில் கலந்துகொள்ளும் இலங்கை – இந்தியக் கடற்றொழிலாளர்களுக்கு இடையில கலந்துரையாடலை நடத்தி இரண்டு நாட்டு கடற்றொழிலாளர்களினதும் எதிர்காலத்திற்கான ஆரோக்கியமான சூழலை உருவாக்குவது தொடர்பாக இதன்போது இருவரும் கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள கச்சதீவு திருவிழாவில் இந்தியாவில் இருந்து பக்தர்கள் கலந்து கொள்வதற்கு கொரொனா அச்சுறுத்தல் காரணமாக அனுமதி வழங்குவதில்லை என்று ஏற்பாடு குழு தீர்மானித்துள்ள நிலையிலேயே அமைச்சர் தேவானந்தா இதனை கூறியுள்ளார்.