January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அம்பிகா சற்குணநாதனின் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் இலங்கை அரசு!

ஐரோப்பிய பாராளுமன்றத்தின் மனித உரிமைகளுக்கான உபகுழுவில் இலங்கையின் மனித மற்றும் தொழிலாளர் உரிமைகளின் நிலைமை குறித்த கருத்துப் பரிமாற்றத்தின் போது, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரான அம்பிகா சற்குணநாதன் முன்வைத்துள்ள கருத்துக்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு பதிலளித்துள்ளது.

அம்பிகா சற்குணநாதனின் சாட்சியத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பல தவறான அறிக்கைகள் குறித்து தாம் கவலையடைவதுடன், அவரின் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கப்பதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பொறிமுறைகள் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆகியவற்றுடன் நீண்டகால ஒத்துழைப்பில் ஈடுபட்டு, உள்நாட்டு செயன்முறைகள் மற்றும் நிறுவனங்களின் மூலம் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை நிவர்த்தி செய்வதற்கான தனது உறுதிப்பாட்டை வழங்கும் நேரத்தில் அம்பிகா சற்குணநாதனின் கருத்துக்கள் அதற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகள் தொடர்பாக அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் தனது ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையைப் பயன்படுத்த வேண்டும் என சற்குணநாதன் வழங்கிய பரிந்துரைகள் தொடர்பில் தாம் கவலையடைவதாகவும் குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அவரது சாட்சியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இன ரீதியாக சமூகங்களுக்கு பாகுபாடு காட்டப்படுவது குறித்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் ஒரு காலத்தில் சமூகங்களுக்கிடையில் வெறுப்பைத் தூண்டிய தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சாரத்தை நினைவூட்டுவதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிடுகின்றது.

இலங்கை போன்ற பல்லின மற்றும் பல மதங்கள் கொண்ட மக்கள் வாழும் நாட்டில், சமூக நல்லிணக்கத்தைக் கருத்திற்கொண்டு, சர்வதேச சமூகத்தில் இலங்கை குறித்த ஆபத்தான தவறான கருத்துக்கள் பரப்பப்படுவதை தடுக்கும் வகையில் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் நிராகரிக்கப்படல் வேண்டும் என்றும் வெளிவிவகார அமைச்சு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.