இலங்கைக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்களுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தல் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை தடுத்து நிறுத்தக் கோரி யாழ்ப்பாணம் வடமராட்சி மீனவர்கள் தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாக இன்றைய தினமும் போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில், அந்தப் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்றிருந்த போதே சுமந்திரன் இதனை கூறியுள்ளார்.
இதன்போது மீனவர்கள் மத்தியில் உரையாற்றிய சுமந்திரன், 2017ஆம் ஆண்டின 11ஆம் இலக்க இழுவை மடி தடை சட்டம் மற்றும் வெளிநாட்டு படகுகளுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு மீன்பிடி வள்ளங்களை ஒழுங்குபடுத்தும் 2018ஆம் ஆண்டின் முதலாம் இலக்க சட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த கோரி உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்யவுள்ளதாக கூறியுள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வடமாராட்சி மீனவர்கள் பருத்தித்துறை – பொன்னாலை வீதியினை வழி மறித்து போரட்டத்தை முன்னெடுத்து வந்த நிலையில், அந்த வீதியில் போராட்டத்தை நடத்த பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து மீனவர்கள் கறுப்பு கொடிகளுடன் கடலில் இறங்கி போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.