January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”பொறுப்புகளை மறந்து உரிமைகள் பற்றி மாத்திரம் பேசுவது உகந்ததல்ல”: சுதந்திர தின உரையில் ஜனாதிபதி

பெற்றுக்கொண்ட சுதந்திரத்தின் உயர்ந்தபட்ச பலனை அடைவதற்கு, அனைவரும் நாட்டுக்கான தமது பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டுமென்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

சுதந்திரமானதும் ஜனநாயகமானதுமான நாட்டின் மக்களுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளன. அது போன்றே, பொறுப்புகளும் உள்ளன என்றும் தெரவித்த ஜனாதிபதி , அந்தப் பொறுப்புகளை மறந்து உரிமைகள் பற்றி மாத்திரம் பேசுவது உகந்ததல்ல என்றும் குறிப்பிட்டார்.

கொழும்பு சுதந்திரச் சதுக்கத்தில் இடம்பெற்ற 74ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்டு தேசத்துக்காக உரையாற்றும் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“நாட்டுக்கு முன்னால் காணப்படும் சவால்களை வெற்றிகொள்ள வேண்டுமாயின், அர்ப்பணிப்புகளின் ஊடாகவே அவை சாத்தியப்படும். கடினமான காலங்கள் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அவ்வாறான கடினமான காலங்களை எதிர்கொள்வதற்கு, பலமிக்க மனிதர்கள் அவசியம். நாம் தற்காலத்தில் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் அனைத்தும் நீண்டகாலப் பிரச்சினைகள் அல்ல. நேர்மறையான அணுகுமுறைகளுடன் அவ்வாறான பிரச்சினைகளுக்கு பதிலளிக்க முடியும்” என்று, ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

“நாடு தற்போது முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான காரணங்களைக் கண்டுபிடித்துக்கொண்டு பல வருடங்கள் பின்னோக்கிச் செல்வதை விட, அவற்றுக்கான நீண்டகால மற்றும் குறுகியகாலத் தீர்வுகளைக் காண்பதே காலோசிதமானது. அரசாங்கம் தற்போது அதற்கான அவதானத்தையே செலுத்தியுள்ளது” என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நாட்டுக்கு எடுத்துக்காட்டாக எப்போதும் செயற்படுமாறு அனைத்து அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அரசியல்வாதிகளிடமும் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி அவர்கள், நாட்டு மக்களுக்கு அந்த முன்னுதாரணத்தைக் காட்டும் போதே, பெரும்பாலான மக்கள் உங்களைப் பின்பற்றுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.

வெற்றிகொள்ளப்பட்டுள்ள சுதந்திரத்தை எதிர்காலச் சந்ததியினருக்காகப் பாதுகாப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் ஒற்றுமை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை நிலைநாட்டுவதாக வழங்கிய உறுதிமொழியை எப்போதும் காப்பதாகவும் குறிப்பிட்டார்.

சுதந்திரத்தின் உண்மையான அர்த்தத்தை அடைந்த பெருமைமிக்க தேசத்தை உருவாக்குவதற்காக இணையுங்கள் என்று, தேசபக்தியுள்ள மக்கள் அனைவருக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.