January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம்!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய படகுகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

மாவட்ட செயலகத்தின் இரண்டு பிரதான வாசல்களையும் முடக்கி அதற்கு முன்பாக அமர்ந்திருந்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் எழுத்து மூலம் உத்தரவாதம் வழங்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் மீனவர்கள் போராட்ட ம் நடத்தும் இடத்திற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரடியாக சென்று மீனவர்களுடன் பேச்சுக்களை நடத்த முயற்சித்துள்ளார்.

இதன்போது, இலங்கைக் கடற்பரப்புக்குள் இந்திய படகுகள் நுழைவது நிரந்தரமாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனும் உத்தரவை எழுத்து மூலமாக தர வேண்டும் என மீனவர்களால் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதற்கு பதில் வழங்கிய அமைச்சர், எழுத்து மூலமான உத்தரவாதம் தர முடியாது எனவும், தான் வாய் மூலமாகவே உத்தரவாதத்தையே தர முடியும் என கூறிய நிலையில் அதனை மீனவர்கள் ஏற்க மறுத்தனர்.

இதனை தொடர்ந்து அங்கு அமைதியின்மை நிலவிய நிலையில் அமைச்சர் அங்கிருந்து வெளியேறிச் சென்றுள்ளார்.