January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டேவின் மகன் கைது!

களனி பல்கலைக்கழகத்தின் ராகம மருத்துவப் பீட மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டேவின் மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர், நேற்று இரவு ராகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததை தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மருத்துவப் பீடத்தின் விடுதிக்குள் செவ்வாய்க்கிழமை இரவு நுழைந்த குழுவொன்று மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருந்தது.

இதில் நான்கு மாணவர்கள் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது தாக்குதல் நடத்திய நபர்கள் வந்ததாக கூறப்படும் தெங்கு அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வாகனமொன்றை மாணவர்கள் வழிமறித்து பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர்.

இது தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டேவின் மகன் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் களனி பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில் 2 விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அருந்திக பெர்ணான்டோ அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.