
File Photo
இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரையில் மாகாண சபைகள் இருக்க வேண்டும் என்பதனாலேயே 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான கோரிக்கைகளை முன்வைப்பதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சரான பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற பேரில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அற்ற புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்காக இரகசிய நோக்கத்தை சுட்டிக்காட்டும் வகையிலேயே நரேந்திர மோடிக்கு தமிழக் கட்சிகள் கடிதம் அனுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ எனும் கருத்தாக்கம், புதிதாக அறிமுகம் செய்யப்படும் அரசியல் அமைப்பிலிருந்து மாகாண சபையை நீக்குவதற்கான ஒரு முன்னோடி திட்டமாக கருதப்படுவதாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
எனவே, 13ஆம் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கு கேட்பது, தமிழர்களாக அதிக அதிகாரம் கிடைக்கும் எனும் காரணத்திற்காக அல்ல, மாறாக இந்தத் திருத்த சட்டம் இல்லாவிட்டால் தமிழர்களுடைய அதிகாரம் முழுதுமாக சுரண்டப்பட்டுவிடும் எனவும் விக்னேஸ்வர் ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.