File Photo
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 27 பேரை விடுதலை செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் தமிழ் பத்திரிகைகளின் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளதாக பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்போது குறிப்பிட்டுள்ள அமைச்சர், அரசியல் கைதிகள் என்று சட்டத்தின் அடிப்படையில் எவரும் இல்லையெனவும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களே உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் முன்னாள் பிரதமர நீதியரசர் அசோக்க டி சில்வா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு பிணை வழங்குவது மற்றும் விடுதலை செய்வது தொடர்பாக ஜனாதிபதிக்கு பரிந்துரை வழங்குவது தொடர்பான ஆலோசனைக் குழுவுக்கு கிடைத்துள்ள விண்ணப்பங்களை அடிப்படையாகக்கொண்டு 27 பேரை விடுதலை செய்வதற்கான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.