வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ற வகையில் தொழில்சார்ந்த தொழிற்கல்வி கற்கைநெறிகளை ஆரம்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதிகமான இளைஞர் யுவதிகளுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொழில்முறை மட்டத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தல் மற்றும் பாடசாலையிலிருந்து விலகி வெளிநாடு செல்லும் இளைஞர் யுவதிகளை அங்கு திறமையான தொழிலாளர்களாக பணிபுரிவதற்கு வழியேற்படுத்துவது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
திறமையுள்ள போதிலும் பயிற்சி சான்றிதழ் அற்றவர்களுக்கு குறுகிய கால பயிற்சி மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தல், வெளிநாட்டு வேலைவாய்ப்பு சந்தையையும், இந்நாட்டு இளம் சமூகத்தினரையும் இணைக்கக்கூடிய ஒரு முறைமையை உருவாக்குவது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
வெளிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவினால் தற்போது வேலைவாய்ப்புகள் உள்ள நாடுகள் மற்றும் வெற்றிடங்கள் காணப்படும் துறைகள் தொடர்பில் பிரதமருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இளைஞர் விவகார அமைச்சு மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சு ஆகியன ஏற்கனவே இளைஞர் யுவதிகளுக்காக தொழில்சார் துறைகளை உள்ளடக்கும் வகையிலான வெளநாட்டு வேலைவாய்ப்புகளை இலக்காகக் கொண்ட தொழிற்பயிற்சி கற்கைநெறிகளை ஆரம்பித்துள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.