January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தங்கள்: வர்த்தமானி வெளியானது!

பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ள இலங்கை அரசாங்கம் அது தொடர்பான சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வு எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள நிலையிலேயே அரசாங்கம் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

கடந்த 25 ஆம் திகதி கொழும்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்த வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், பயங்கரவாத தடைச் சட்டத்தில் செய்யப்படும் திருத்தங்கள் தொடர்பில் விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில் 27 ஆம் திகதி வர்த்தமானியில் அது தொடர்பான சட்டமூலத்தை வெளியிடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் தற்காலிக ஏற்பாடுகள் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக அந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த திருத்தங்களின் அடிப்படையில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விதிகளின் கீழ் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடியும்.

அத்துடன், சட்டத்தரணி ஒருவருக்கு தடுப்புக்காவல் அல்லது விளக்கமறியலில் தடுத்து வைத்திருக்கும் நபரை பார்வையிட செல்லமுடியும் என்பதுடன், சந்தேகநபரின் உறவினர்களுடன் தொடர்புகொள்ள முடியும்.

இந்தத் திருத்தங்கள், தடுப்புக்காவல் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒருவரைத் தடுத்து வைக்கும் காலத்தை 18 மாதங்களில் இருந்து 12 மாதங்களாகக் குறைக்கவும் வழிவகை செய்கின்றன.

அத்துடன், குறித்த திருத்தங்கள் ஊடாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரின் நிலை குறித்து ஆராய்வதற்கு நீதவானுக்கும் அனுமதி வழங்கப்படுகின்றது.

இந்த சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வர்த்தமானி அறிவித்தலை இந்த இணைப்பில் பார்வையிடலாம்