
நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘நீதிக்கான அணுகல்’ நடமாடும் சேவை யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பமானது.
நீதி அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் சேவைகள் தொடர்பில் வடக்கு மாகாண மக்களை தெளிவுப்படுத்தும் வகையில் கடந்த 26 ஆம் திகதி முதல் அந்த மாகாணத்தில் இந்த நடமாடும் சேவை இடம்பெறுகின்றது.
அந்த வகையில் யாழ். மாவட்டத்திற்கான நடமாடும் சேவை இன்றைய தினம் யாழ்.மத்திய கல்லூரியில் ஆரம்பமானது.
இந்த நடமாடும் சேவை இன்றும் நாளையும் காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளன.
யாழில் இன்று ஆரம்பமான இந்த நிகழ்வில் நீதி அமைச்சர் அலி சப்ரி, வெளி விவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மக்களின் தேவையறிந்து நீதி அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘நீதிக்கான அணுகல்’ எனும் தொனிப் பொருளிலான நடமாடும் சேவையினை யாழ். மக்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
இதேவேளை இதன்போது, யாழ். மாவட்டத்தில் கடமையாற்றுவதற்கான திடீர் மரண விசாரணை அதிகாரிகள் மற்றும் சமதான நீதவான்களுக்கான நியமனக் கடிதங்களை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் வழங்கி வைத்தனர்.