இலங்கைக்கும் தனது அரசாங்கத்துக்கும் இடையிலான வர்த்தகத் தொடர்புகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக, துருக்கி வெளிவிவகார அமைச்சர் மெவ்லூட் சவ்சோக்லு தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள துருக்கி வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இன்று சந்தித்தனர்.
இந்த சந்திப்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸும் கலந்துகொண்டிருந்தார்.
வர்த்தக நடவடிக்கைகளைப் பல்வகைப்படுத்தல் மூலம் இலங்கையின் பல்வேறு தயாரிப்புகளுக்கு, துருக்கி சந்தைகளில் பரந்தளவிலான வாய்ப்புகள் கிடைக்கும் என துருக்கி வெளிவிவகார அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.
இலங்கையில் காணப்படும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து தமது நாட்டுத் தொழில் முயற்சியாளர்களுக்குத் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் துருக்கி அமைச்சர் மெவ்லூட் சவ்சோக்லு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், கடந்த ஆண்டு துருக்கிக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு விடுத்திருந்த அழைப்பை மீண்டும் நினைவுபடுத்தியுள்ளார்.
இதன்போது இலங்கையில் கொவிட் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக வழங்கிய பல்வேறு மருத்துவ உபகரணங்கள் உட்பட உதவிகள் மற்றும் ஒத்துழைப்புகளுக்காகத் துருக்கி வெளிவிவகார அமைச்சருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.