சதொச நிறுவன ஊழியர்களை அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுத்தியதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
2010 முதல் 2014 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சதொச நிறுவனத்தின் 153 ஊழியர்களை, சட்ட விரோதமான முறையில் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுத்தி அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்து அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கடந்த நல்லாட்சி காலப்பகுதியில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு விசாரணை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தது.
இந்நிலையில் அந்த வழக்கு மீண்டும் இன்று நீதவான் புத்திக சி.ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேக நபர்கள் மூவருக்கும் எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத காரணத்தினால் அவர்களை விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.