வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோருக்கான புதிய கொவிட் தடுப்பு ஒழுங்குவிதிகள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கைப் பிரஜைகள் மற்றும் வெளிநாட்டு பிரஜைகளுக்கென இந்த ஒழுங்குவிதிகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய வெளிநாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டு கடவுச்சீட்டை கொண்டவர்கள் 50,000 டொலர் பெறுமதியான பயணக் காப்புறுதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர்கள் இங்கு தங்கியிருக்கும் காலப்பகுதியில் கொவிட் தொற்றுக்கு உள்ளானால், வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெறுவதற்கான வசதியை அதனூடாக பெற்றிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டிற்கு வந்தவுடன் விமான நிலையத்தில் நடத்தப்படும் பிசிஆர் பரிசோதனையை தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் இலங்கையர்கள் 7 நாட்கள் சுய தனிமைப்படுத்தப்பட்ட காலத்திற்கு இணங்கி விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியும்.
இதேவேளை இலங்கைப் பிரஜைகளுக்கு வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்வதற்கான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.
மேலும், முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பெற்றோருடன் வரும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கொரோனா பரிசோதனையில் இருந்து முற்றிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை கொவிட் தொற்று அபாயம் அதிகமாக உள்ள நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் காலம் 7 முதல் 14 நாட்கள் வரை மாறுபடும் எனவும் சுகாதார அமைச்சின் ஒழுங்குவிதிகளில் கூறப்பட்டுள்ளது.