பயங்கரவாதத் தடைச் சட்டம் திருத்தப்பட்டு வருவதாகவும் அந்தத் திருத்தங்கள் அடங்கிய சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரித்து பாராளுமன்றத்திற்கு முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டின் முதலாவது இராஜதந்திரிகளுடான கலந்துரையாடல் நேற்று கொழும்பு வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற பொதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
பெப்ரவரி இறுதி வாரத்தில் ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் 49ஆவது கூட்டத் தொடருக்கு முன்னதாக மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான முன்னேற்றம் தொடர்பான தகவல்களைப் பகிர்வதே இந்த கலந்துரையாடலின் நோக்கமாக இருந்தது.
மனித உரிமைகள் பேரவையின் செப்டெம்பர் 2021 அமர்வில், மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும், மனித உரிமைகள் பேரவை உட்பட ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்ந்தும் ஈடுபடுவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியதை அமைச்சர் பீரிஸ் இதன்போது நினைவு கூர்ந்துள்ளார்.
பொறுப்புக்கூறல், நீதி மறுசீரமைப்பு மற்றும் அர்த்தமுள்ள நல்லிணக்கம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு உள்நாட்டு நிறுவனங்களின் செயற்பாடுகளினூடாக இலங்கை அரசாங்கம் கணிசமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.
இதேவேளை 43 வருடங்களின் பின்னர் சர்வதேச நியதிகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு அமைவாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் கொண்டுவரும் நோக்கத்துடன் அந்தச் சட்டம் திருத்தப்பட்டு வருவதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
உத்தேசத் திருத்தங்கள் அடங்கிய சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் இறுதி அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்பிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் முக்கிய திருத்தங்களில் தடுப்புக் காவல் உத்தரவு, கட்டுப்பாட்டு உத்தரவு, நீதித்துறை மீளாய்வு உத்தரவுகளை வெளிப்படையாக அங்கீகரித்தல் தொடர்பான பிரிவுகளில் திருத்தங்களை மேற்கொள்ளுதல், நீண்ட கால தடுப்புக் காவலில் வைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான வழக்குகளை விரைவாகத் தீர்த்தல், சுதந்திரத்துக்கு இடையூறு விளைவிக்கும் பிரிவுகளை இரத்துச் செய்தல், நீதிவான்கள் மற்றும் நீதித்துறை மருத்துவ அதிகாரிகளை அணுகுவதற்கான விதிகளை வெளிப்படுத்துதல் மற்றும் அறிமுகப்படுத்துதல், தடுப்புக் காவலில் உள்ள காலத்தில் துஷ்பிரயோகம் மற்றும் சித்திரவதைகளைத் தடுத்தல், குடும்பத்துடன் தொடர்புகொள்வதற்கான உரிமை, நீண்ட கால கைதிகளுக்கு பிணை வழங்குதல் மற்றும் வழக்குகளை நாளாந்தம் விசாரணை செய்தல் போன்ற பிரிவுகளிலான திருத்தங்கள் உள்ளடங்கும் என்றும் அமைச்சர் பீரிஸ், வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு தெளிவுப்படுத்தியுள்ளார்.
நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதற்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் 13ஆவது பிரிவின் கீழ் ஆலோசனை சபையொன்று அமைக்கப்படும் என்றும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவல் உத்தரவு அல்லது கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட எவருக்கும் அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோருவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.