இலங்கையில் சைக்கிள் பாவனையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
காற்று மாசுபாடு உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த நடவடிக்கையை எடுக்கவுள்ளதாகவும் இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, சைக்கிள் ஓட்டுவதற்காக ஒவ்வொரு வீதியிலும் அதற்கான தனிப் பாதையொன்று அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், வீதிகளில் போக்குவரத்து நெரிசல் உள்ள போது பயணிக்கும் ஒவ்வொரு வாகனத்திற்கும் கிலோமீட்டர் ஒன்றுக்கு 103.56 ரூபாவை அரசாங்கம் செலவிட வேண்டியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி, காற்று மாசுபாட்டை குறைத்தல், நேர விரயத்தை தடுத்தல் போன்று தொற்றாத பல நோய்களை கட்டுப்படுத்த காணப்படும் வாய்ப்புகள் காரணமாக சைக்கிள் பாவனையை ஊக்குவிப்பதற்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த அணுகுமுறையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.