மின்சார உற்பத்திக்காக 10 நாட்களுக்கு தேவையான எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதனால் எதிர்வரும் வாரங்களில் மின்வெட்டு இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்காது என்று பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நெருக்கடி நிலைமையில் மின்வெட்டுக்கு அனுமதி வழங்குவதா? இல்லையா? என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆராய்ந்து வந்த நிலையிலேயே பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
எரிபொருள் நெருக்கடியால் மின்வெட்டை அமுல்படுத்துவது தொடர்பில் மின்சார சபை அனுமதி கோரியிருந்த நிலையில் இன்றைய தினம் வரையில் அதற்கு அனுமதி வழங்காது இருப்பதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கடந்த 25 ஆம் திகதி தீர்மானித்தது.
இதன்படி இன்று பிற்பகல் ஆணைக்குழு கூடி நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடியை மீளாய்வு செய்து மின்வெட்டு தேவையா என்பதை தீர்மானிப்போம் என்று ஆணைக்குழுவின் தலைவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் களனிதிஸ்ஸ சோஜிட்ஸ் தனியார் மின் உற்பத்தி நிலையம் பராமரிப்புப் பணிகள் காரணமாக நேற்று முதல் மூடப்பட்டுள்ளதால், தேசிய மின் கட்டமைப்பிறக்கு 162 மெகாவோட் மின்சாரம் இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.