ஜனவரி 27 ஆம் திகதி வரை மின்வெட்டுக்கான அனுமதி வழங்கப்படவில்லை என்றும், அதுவரையில் மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் கைவசம் இருப்பதாகவும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையினால் மின்வெட்டு தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை பெட்ரொலிய கூட்டுத்தாபனத்திடம் தற்போது கையிருப்பில் உள்ள எரிபொருட்களின் அளவு தொடர்பாகவும் அவற்றை மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்கக்கூடிய திகதிகள் பற்றிய தகவல்களை வழங்குமாறும் அந்த ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை, திருத்தப் பணிகள் நடைபெற்று வரும் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் 3ஆம் அலகு இம்மாத இறுதிக்குள் மீண்டும் மின் உற்பத்தியை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, தடையற்ற மின் விநியோகத்தை வழங்க முடியுமாக இருக்கும் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.