May 28, 2025 16:46:01

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தயா மாஸ்டருக்கு 5 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறைத் தண்டனை!

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக செயற்பட்ட தயா மாஸ்டர் என்றழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதிக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தினால் 5 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்களுடன் இணைந்து செயற்பட்டமை தொடர்பாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தயா மாஸ்டருக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்கிலேயே நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அறிவித்துள்ளது.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தயா மாஸ்டர், இலங்கை பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தார்.

இதனைத் தொடர்ந்து தயா மாஸ்டருக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

2009 ஆம் ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதி தொடக்கம் 2009 மே 18ஆம் திகதிக்கு உட்பட்ட காலப்பகுதிக்குள், தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவர்களுடன் இணைந்து செயற்பட்டுள்ளதாககவும், இதன்படி 2006 ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளைத் தடுக்கும் கட்டளைகளின் கீழ் தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றத்தை புரிந்துள்ளதாக, சட்டமா அதிபரால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்ட போது, தன் மீதான குற்றச்சாட்டுக்களை தயா மாஸ்டர் ஒப்புக் கொண்டமையால், அவருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்றைய வழக்கு விசாரணையின் போது, தயா மாஸ்டர் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆஜராகியிருந்தார்.