டொலர் நெருக்கடியால் இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள எரிபொருள் நெருக்கடியை எவ்வாறு சமாளிப்பது என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அரசாங்கத்திற்கு யோசனையொன்றை முன்வைத்துள்ளார்.
இதன்படி எரிபொருள் விலை சூத்திரத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன், வாகனங்களின் போக்குவரத்தை கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
குறிப்பாக கொழும்பு நகருக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த வேண்டும் எனவும், வெளிமாவட்டங்களை சேர்ந்த அரச நிறுவனங்களின் அதிகாரிகளை கொழும்புக்கு அழைப்பதை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை வாரத்திற்கு ஒருநாள் பாடசாலைகளை வீடியோ ஊடாக நடத்தவும் அவர் யோசனையை முன்வைத்துள்ளார்.
அதேபோன்று பொதுமக்கள் அத்தியவசியமற்ற பயணங்களை குறைத்துக்கொள்வதும் சிறந்தது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.