எரிபொருள் நெருக்கடியால் ஜனவரி 25 ஆம் திகதி முதல் மின்வெட்டை அமுல்படுத்த நேரிடலாம் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடமிருந்து போதுமான எரிபொருள் கிடைக்காமையினால் சபுகஸ்கந்த அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி இயந்திரங்கள் செயலிழந்துள்ளன.
இதனால் தேசிய மின் கட்டமைப்பிற்கு கிடைக்க வேண்டிய 163 மெகாவோட் மின்சாரம் கிடைக்காது போயுள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நுரைச்சோலை மின்நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அங்குள்ள மின் உற்பத்தி இயந்திரங்கள் செயலிழந்துள்ளன.
இதனால் எதிர்வரும் நாட்களில் மின்சார நெருக்கடியை எதிர்நோக்க நேரிடலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை முதல் கட்டம் கட்டமாக நாட்டில் மின்வெட்டை அமுல்படுத்த நேரிடலாம் என்றும், அது தொடர்பில் நாளைய தினத்திற்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை மார்ச் மாதத்திற்குள் எரிபொருள் கொள்வனவுக்காக டொலர் கிடைக்காது போகுமாக இருந்தால், மின் உற்பத்திக்கு பெரும் பாதிப்பு ஏற்படலாம் என்றும், இதனால் நாட்டில் நான்கு மணிநேர மின்வெட்டை அமுல்படுத்த நேரிடலாம் என்றும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.