November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கைக்கு இலங்கை பதில்!

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ‘உலக அறிக்கை 2022’ என்ற அறிக்கையில் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான விடயங்கள் மிகைப்படுத்தப்பட்ட மற்றும் தேவையற்ற எதிர்மறையான வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறான பக்கச்சார்பான அறிக்கையிடல் உள்நாட்டு முரண்பாடுகளை தீவிரப்படுத்தி மோசமான நிலைமையைத் தோற்றுவிக்கும் என்றும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ‘உலக அறிக்கை 2022’ என்ற அறிக்கை தொடர்பில் வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் தொடர்பான விடயங்களில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் உட்பட சர்வதேச சமூகத்துடன் ஆக்கபூர்வமாக ஈடுபடுவதற்கான கொள்கையை இலங்கை பின்பற்றுகின்றது என்றும், இவ்வாறான நிலைமையில் மனித உரிமைகள் விடயம் தொடர்பில் வெளியிடப்பட்டுள் மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் தொடர்பில் கவலையடைவதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட மற்றும் நிறைவேற்றப்பட்ட நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயன்முறையின் மூலம் நிலையான சமாதானத்தை நிலைநாட்டுவதில் இலங்கை ஈடுபட்டுள்ளதாக கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையில் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எமது சொந்த அரசியலமைப்பு மற்றும் எமது சர்வதேசக் கடமைகளுக்கு இணங்க மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் இலங்கை தனது நீண்டகால அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியுள்ளது என்றும், 2022 ஜனவரி 18ஆந் திகதி இலங்கைப் பாராளுமன்றத்தின் 9ஆவது கூட்டத் தொடரின் தொடக்கத்தில் ஜனாதிபதியினால் இந்தச் செய்தி மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றும் வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் பொருளாதார, சமூக மற்றும் மனித அபிவிருத்தி மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைதல் உட்பட அனைத்து துறைகளிலும் தனது ஆணையை நிறைவேற்றுவதில் அதன் மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும்.
அதே நேரத்தில், கோவிட்-19 தொற்றுநோயால் ஏற்பட்ட செயற்பாட்டு, பொருளாதார மற்றும் மனிதத் தடைகள் இருந்தபோதிலும், இலங்கை மக்களின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட மற்றும் சர்வதேச ரீதியாக வலியுறுத்தப்பட்ட போருக்குப் பிந்தைய நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை வழங்குவதில் அரசாங்கம் முக்கியமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சுதந்திரமான உள்நாட்டு நிறுவனங்கள், காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீடுகள் அலுவலகம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் மற்றும் இலங்கையின் நிலைபேறான அபிவிருத்தி சபை ஆகியன இந்த முயற்சிக்கு முக்கிய உறுதுணையாக உள்ளன.

இந்த நிறுவனங்களின் சுதந்திரமான சட்டபூர்வ ஆணைகளை நிறைவேற்றுவதற்காக நிதி மற்றும் ஏனைய ஆதரவுடன் நாங்கள் அதிகாரம் பெற்றுள்ளோம். மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் குறித்த உள்நாட்டு செயன்முறைகளின் மூலம் ஏற்பட்ட முன்னேற்றம் தொடர்பான வழக்கமான புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் பேரவையிலான இலங்கையின் அறிக்கைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்திற்கு நாங்கள் அளித்த பதிலில், பயங்கரவாத தடைச் சட்டத்திலான திருத்தம், பொறுப்புக்கூறல், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதிகளை விடுவித்தல், ஒன்று கூடுவதற்கான சுதந்திரம், கோவிட் தொற்றுநோய் மற்றும் முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் போன்ற பல துறைகள் தொடர்பான சமீபத்திய மாதங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை நாங்கள் முன்னிலைப்படுத்தியுள்ளோம் என்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.