January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புலம்பெயர் இலங்கையர்களுடன் கலந்துரையாட சந்தர்ப்பம் கோரும் ஜனாதிபதி

புலம்பெயர் இலங்கையர்களுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசிய மற்றும் பொதுநலவாய அபிவிருத்தி விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட்டிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் தாரிக் அஹமட், கொழும்பு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பின் போது, இலங்கை எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதுடன், மக்கள் அனைவரும் ஒன்றாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தமது நோக்கத்தின்படி ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கின்ற புலம்பெயர் இலங்கையர்களுடன் இணைந்துச் செயற்பட விருப்பம் தெரிவித்துள்ள ஜனாதிபதி, அதற்காகப் புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாடச் சந்தர்ப்பம் வழங்குமாறு அமைச்சர் தாரிக் அஹமட்டிடம் கேட்டுக்கொண்டார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையின் நெருங்கிய மற்றும் நடைமுறை நண்பராக ஒத்துழைக்க, ஐக்கிய இராச்சியம் எப்போதும் தயாராக இருப்பதாக அமைச்சர் தாரிக் அஹமட் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஐக்கிய இராச்சியத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு 2023இல் 75 வருடங்கள் பூர்த்தியடைகின்றன. இதற்காக ஒரு விழாவை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதில், இரு நாடுகளின் தனித்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் கலை, கலாசார நிகழ்வுகள் மற்றும் இரு நாட்டு மக்களுக்கிடையிலான தொடர்புகளை மேம்படுத்தும் வகையிலான நிகழ்வுகளை நடத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.