January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழ்க் கட்சிகளின் கடிதம் இந்தியத் தூதுவரிடம் கையளிக்கப்பட்டது!

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்தி இந்தியப் பிரமருக்கு அனுப்புவதற்காக தமிழ்க் கட்சிகள் இணைந்து தயாரித்துள்ள கடிதம், இந்தியத் தூதுவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தில் இன்று மாலை, தூதுவர் கோபால் பாக்லேவை சந்தித்து அந்தக் கடிதத்தை கையளித்துள்ளனர்.

இந்த நிகழ்வில் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா, சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், விக்னேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கடந்த மாதங்களில் தமிழ் பேசும் கட்சிகள் கூடி ஆராய்ந்து குறித்த கடிதத்தை டிசம்பர் இறுதியில் தயாரித்திருந்தது.

இந்தக் கடிதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் என்.சிறிகாந்தா, தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

எனினும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் அந்த கடிதத்தில் கையெழுத்திடவில்லை.

ஆனால் வெளியில் இருந்து இந்த முயற்சிக்கு ஆதரவு வழங்குவதாக அவர்கள் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.