November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எரிபொருள் கொள்வனவுக்காக இலங்கைக்கு 500 மில்லியன் டொலர் உதவி வழங்கும் இந்தியா!

டொலர் பற்றாக்குறையால் எரிபொருள் நெருக்கடிக்குள் சிக்கியிருக்கும் இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது.

எரிபொருளை கொள்வனவு செய்வதற்காகவே இந்த நிதியுதவி வழங்கப்படுவதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கும் இலங்கை நிதி அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷவுக்கும் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்தே இந்த நிதியை வழங்க இந்தியா அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த விடயம் தொடர்பில் அறிவித்து இந்திய வெளியுறவு அமைச்சரினால் இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.

அண்மையில், வெளிநாட்டு பரிமாற்ற ஆதரவாக 900 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகையினை இந்தியா இலங்கைக்கு வழங்கியிருந்தது.

இலங்கையுடன் எப்பொழுதும் இணைந்திருக்கவும், இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்கவும் அத்துடன் இருதரப்பு பொருளாதார மற்றும் வர்த்தக பங்குடைமைக்கான சிறந்த உத்வேகத்தை வழங்கவும் இந்தியா கொண்டிருக்கும் உறுதிப்பாட்டுடன் இணைந்தவையாக இந்த செயற்பாடுகள் அமைந்துள்ளன என இந்திய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.