தமது பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைக்குமாறு வடக்கு, கிழக்கை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தின் புதிய கூட்டத் தொடரை இன்று ஆரம்பித்து வைத்து அரச கொள்கை விளக்க உரையை நிகழ்த்தும் போதே ஜனாதிபதி இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யுத்தத்தினால் காணாமற் போனவர்கள் தொடர்பான பிரச்சினை ஒரு தரப்பினருக்கு மாத்திரம் பொதுவானதல்ல. அனைவருக்கும் எம்மால் முடிந்தளவில் நீதி, நியாயம் வழங்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்று இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இதேவேளை நீண்டகாலமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த எல்.ரீ.ரீ.ஈ செயற்பாட்டாளர் சிலருக்கு மன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்ய நான் கடந்த நாட்களில் நடவடிக்கை எடுத்திருந்தேன். அதேபோன்று 1978ஆம் ஆண்டு தொடக்கம் நடைமுறையிலிருக்கும் பயங்கரவாதத்தைத் தடுக்கும் வகையில் அதற்கான திருத்தங்களை கொண்டு வர நாங்கள் தயாராகவிருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.
இதன்போது வடக்கு, கிழக்கு மக்கள் பிரச்சனைகள் தொடர்பில் தெரிவித்த ஜனாதிபதி, யுத்தத்தினால் நீண்டகாலம் பாதிக்கப்பட்டிருந்த வடக்கு, கிழக்கு மக்களுக்கு பொருளாதார பாதுகாப்பே முக்கிய தேவையாகவுள்ளது என்று கூறினார்.
சிறுவர்களுக்கு சிறந்த கல்வி, இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புகள், சுய தொழில்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களுக்கு சிறந்த சந்தை வாய்ப்புக்கள், மக்களுக்கு சுத்தமான குடிநீர், விவசாய நடவடிக்கைகளுக்கான நீர்ப்பாசன வசதிகள், வாழ்வதற்குத் தேவையான வீடுகள், வைத்தியசாலைகள், நெடுஞ்சாலைகள் உட்பட மேலும் பல அடிப்படை வசதிகள் அவர்களுக்குத் தேவையாகவிருந்தது.
அனைத்து சமூகத்தினருக்கும் எத்தகைய பராபட்சமுமின்றி தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குவது நல்லிணக்கத்திற்கு அடிப்படையாக அமையும் என்பது அரசின் கொள்கையாகும் என குறிப்பிட்டார்.
இதன்படி பல்வேறுபட்ட அரசியல் கருத்து வேறுபாடுகளை தற்காலிகமாக ஒருபுறம் வைத்து உங்கள் பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நீங்கள் உங்களது ஆதரவினை வழங்க வேண்டும் என்று, வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் உள்ள மக்களின் பிரதிநிதிகளிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.