இலங்கையின் பொருளாதார நிலைமை தொடர்பில், கனடா அரசாங்கம் தமது நாட்டு பிரஜைகளுக்கு எச்சரிக்கை அறிவித்தலொன்றை விடுத்துள்ளது.
இந்தக் காலப்பகுதியில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் போது, அங்கு நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை தொடர்பில் கவனம் செலுத்தி நடந்துகொள்ள வேண்டும் என்று கனடா அரசாங்கம் தமது நாட்டுப் பிரஜைகளுக்கு பயண ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது.
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடா உயர்ஸ்தானிகர் அலுவலகம் ஊடாக வெளியிடப்பட்டுள்ள குறித்த பயண ஆலோசனை தொடர்பான அறிக்கையில், இலங்கையின் பொருளாதார நெருக்கடி, அடிப்படை தேவைகளின் பற்றாக்குறையை நோக்கி நகர்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக மருந்துப்பொருட்கள், எரிபொருள் மற்றும் உணவு என்பனவற்றில் தட்டுப்பாடு நிலவுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது பொருளாதார ஸ்திரத்தன்மை, சுகாதாரம் உள்ளிட்ட பொதுச்சேவைகளை பாதிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
⚠️ Canadians in #SriLanka: The deteriorating economic situation is affecting the supply of basic necessities and the delivery of public services.
•Keep supplies of food, water and fuel on hand
•Monitor local media for information https://t.co/btuL6iQfSs pic.twitter.com/NSRZ3T2yK0— Travel.gc.ca (@TravelGoC) January 13, 2022
எனவே, இலங்கையில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் போது உணவு, நீர் மற்றும் எரிபொருளை கையிருப்பில் வைத்துக்கொள்ளுமாறு தமது நாட்டு பிரஜைகளை கனடா கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை இலங்கை பொருளாதார நிலவரம் தொடர்பில் உள்நாட்டு ஊடகங்களின் ஊடாக அறிந்துகொள்ளுமாறும் கனடா உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.