
தரம் 5 புலமைப் பரிசில் மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைகளுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நிறுத்துவது தொடர்பில் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி ஜனவரி 18 ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் தொடர்புடைய ஏனைய நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை க.பொ.த உயர்தரப் பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் தொடர்புடைய ஏனைய நடவடிக்கைகள் பெப்ரவரி முதலாம் திகதியுடன் நிறுத்தப்பட வேண்டும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2021 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை ஜனவரி 22 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், உயர்தரப் பரீட்சை பெப்ரவரி 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
பொதுப் பரீட்சைகளுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகளை பரீட்சைக்கு 5 நாட்களுக்கு முன்னர் தடை செய்யும் சட்டத்திற்கு அமையவே பரீட்சைகள் திணைக்களத்தினால் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.