லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவராக தெஷார ஜயசிங்க மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக பதவி வகித்த தெஷார ஜயசிங்கவை அந்தப் பதவியில் இருந்து நீக்கி, அந்த இடத்திற்கு ரேணுக பெரேராவை நியமிக்க நேற்று நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
எனினும் ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய தெஷார ஜயசிங்கவே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை கெரவலப்பிட்டியவில் அமைந்துள்ள லிட்ரோ எரிவாயு முனையத்தை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நேற்று பார்வையிட்டார்.
முனையத்தில் உள்ள பிரதான செயற்பாட்டுப் பிரிவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, அங்கு கப்பலில் இருந்து எரிவாயு கொண்டுவருதல் மற்றும் களஞ்சியப்படுத்தல் வரையிலான செயற்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.
இம்முனையத்தில், தலா 2,000 தொன்களைக் கொண்ட நான்கு களஞ்சியத் தாங்கிகள் உள்ளன. இக்களஞ்சியசாலையில், தினசரி 8,000 தொன் எரிவாயுக் கையிருப்பு பேணப்பட்டு வருகின்றது.
லிட்ரோ நிறுவனத்தின் மாதாந்த எரிவாயு விநியோகம் 30,000 தொன்களாகும். இதற்காக, மாதந்தோறும் 07 கப்பல்கள் மூலம் எரிவாயு கொண்டு வரப்படுகின்றது.
இதன்போது, லிட்ரோ எரிவாயு நிறுவனத்துக்குச் சொந்தமான ஹம்பாந்தோட்டை முனையத்தின் செயற்பாடுகள் மற்றும் எரிவாயு ஆராய்ச்சிக்கான நிறுவனம் ஒன்றை ஸ்தாபித்தல் போன்ற பணிகள், இந்த வருடம் முன்னெடுக்கப்படும் என்று, எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்தார்.