கொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலையில் 2012 ஆம் ஆண்டில் கைதிகள் 8 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமா ஹேவாவுக்கு மரண தண்டனை விதித்து மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2012 நவம்பர் 9 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட அமைதியின்மையின் போது 27 கைதிகள் கொல்லப்பட்டிருந்தனர்.
இவர்களில் 8 கைதிகள் கொல்லப்பட்டமை தொடர்பில் வழக்குத் தொடர்வதற்கு போதுமான சாட்சியங்கள் இருந்தமையினால் 2019 ஆம் ஆண்டில் சட்டமா அதிபரினால் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கின் பிரதிவாதிகளாக முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன், பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் முன்னாள் பிரதானி நியோமால் ரங்கஜீவ மற்றும் சிறைச்சாலைகளின் முன்னாள் உளவுப்பிரிவு அதிகாரியான இந்திக்க சம்பத் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
இவர்களில் இந்திக்க சம்பத்துக்கு எதிராக முறைப்பாட்டாளர் தரப்பினரால் போதுமான சாட்சிகள் முன்வைக்கப்படவில்லை என சாட்சி விசாரணைகளின் நிறைவில் நீதிபதிகள் குழாம் தெரிவித்தது அவரை விடுவித்திருந்தது.
இதேவேளை இந்த வழக்கின் தீர்ப்பு இன்று கிஹான் குலதுங்க, பிரதீப் ஹெட்டிஆரச்சி மற்றும் மஞ்சுல திலகரட்ன ஆகிய மூவரடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாமினால் அறிவிக்கப்பட்ட போது, மற்றைய பிரதிவாதியான பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் முன்னாள் பிரதானியான பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமையினால் அவர், வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
எனினும் குற்றச்சாட்டுக்கள் உறுதியானதால் எமில் ரஞ்சன் லமாஹேவாவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.