இலங்கை வந்துள்ள சீன வெளிவிவகார அமைச்சரும் அரச ஆலோசனைச் சபையின் உறுப்பினருமான வாங் யீ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினார்.
கொழும்பு ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது சீன வெளிவிவகார அமைச்சரின் விஜயத்தை கௌரவத்துடன் வரவேற்ற ஜனாதிபதி, இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க உறவுகளை நினைவுகூர்ந்தார்.
கொவிட் தொற்றுப் பரவல் காலத்தில் சீனாவிடமிருந்து கிடைத்த பொருள் மற்றும் நிதி உதவிகளுக்காக, சீன வெளிவிவகார அமைச்சருக்கு ஜனாதிபதி, இலங்கை அரசாங்கத்தினதும் மக்களினதும் சார்பில் நன்றியைத் தெரிவித்தார்.
இதேவேளை இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மீட்டிப்பார்த்த வாங் யீ, மீண்டும் இலங்கைக்கு வருகைதரக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்ததுடன், நெருக்கமான நண்பன் என்ற வகையில் சீனாவின் ஒத்துழைப்பு எப்போதும் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.
இதன்போது, கொவிட் தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக, இலங்கைக்கு தடுப்பூசிகளை வழங்க சீன அரசாங்கம் தொடர்ச்சியாக வழங்கிய ஆதரவுக்கும், ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.
கொவிட் தொற்று நோய்க்கு முகங்கொடுத்துள்ள சூழ்நிலையில், பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வாக கடனை மீளச் செலுத்துவதை மறுசீரமைப்பதில் கவனம் செலுத்தினால், அது நாட்டுக்கு பெரும் நிவாரணமாக அமையும் என்றும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.
அதேபோன்று, சீனாவிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகளின் போது சலுகை வர்த்தகக் கடன் திட்டத்தைப் பெற்றுக்கொள்ள முடிந்தால், கைத்தொழிற்றுறையைத் தடையின்றி சீராக நடத்த முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
சீனாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்த வாங் யீ, எதிர்வரும் காலங்களில் அது நிறைவேறும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.