July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் கொரோனா நிலவரம் – ஒரே பார்வையில்

கொரோனா தொற்றுக்கு உள்ளான 414 பேர் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 9,619 ஆக உயர்வடைந்துள்ளது.

பீசீஆர் பரிசோதனை இயந்திரம் பழுது

கொழும்பு, முல்லேரியா வைத்தியசாலையிலுள்ள பீசீஆர் பரிசோதனை இயந்திரம் செயலிழந்துள்ளதால் கொரோனா பரிசோதனை முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கடந்த நான்கு வாரங்களில்  6000 ற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களுடன் தொடர்புடைய சுமார் 30,000 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களிடையே பீசீஆர் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதிலும், கடந்த 6 நாட்களாக இந்த இயந்திரம் செயலிழந்துள்ளதால் பிசிஆர் பரிசோதனை முடிவுகளை வேகமாக வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் 250 மில்லியன் ரூபா செலவில் சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்டிருந்த இந்த இயந்திரம் கடந்த மே மாதத்தில் முல்லேரியா வைத்தியசாலையில் பொருத்தப்பட்டது.

இந்நிலையில் கடந்த மூன்று வாரங்களாக 24 மணி நேரமும் அந்த இயந்திரம் செயற்பாட்டில் இருந்தமையினால் செயலிழந்துள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த இயந்திரத்தை திருத்துவதற்காக சீன நிபுணர்களை அழைத்து வருவதற்கான  கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

பள்ளிவாசல்களை மூடுமாறு கோரிக்கை

இன்று முதல் மறு அறிவித்தல் வரையில் மேல் மாகாணத்தில் உள்ள சகல பள்ளிவாசல்களையும் மூடுமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பி.எம். அஷ்ரப் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

புலனாய்வு அதிகாரிகள் சிலருக்கு தொற்று

மினுவாங்கொடை கொரோனா கொத்தணி தொடர்பில் ஆராயவென நியமிக்கப்பட்ட குற்றப்புலனாய்வு பிரிவினை சேர்ந்த அதிகாரிகள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, விசாரணைகளை முன்னெடுக்க மற்றுமொரு குழுவை நியமிக்குமாறு சட்டமா அதிபர், பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தப்பியோடிய கொரோனா நோயாளி சிக்கினார்

களுத்துறை, நாகொட வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் தப்பிசென்ற கொரோனா தொற்றாளர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை வைத்தியசாலையில் இருந்து தப்பிசென்ற நபரை பொது சுகாதார பரிசோதகர்கள் கண்டுப்பிடித்துள்ளனர். களுத்துறை வடக்கு பகுதியை சேர்ந்த 38 வயதான நபரே இவ்வாறு தப்பிச்சென்றிருந்தார்.

தொழில் திணைக்கள ஊழியர்களுக்கு கொரோனா

நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள தொழில் திணைக்கள ஊழியர்கள் சிலருக்கு  வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

நுழைவு வாயிலில் கடமையில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் 4 பேருக்கும் தொழில் அமைச்சின் சாரதி ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

அங்குள்ள உணவகத்தின் உரிமையாளர் அண்மையில் பேலியகொடை மீன் சந்தைக்கு சென்றுள்ளதால், பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தொற்று ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முடிவெட்ட சென்ற 125 பேர் தனிமைப்படுத்தலில்

கஹதுட்டுவ பிரதேசத்தில் உள்ள சலூன் ஒன்றின் உரிமையாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த சலூனுக்கு சென்ற 125 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கஹதுட்டுவ பொது சுகாதார பரிசோதகர் ஐ.கே.எம். பிரபாத் தெரிவித்துள்ளார்.

பேலியகொட மீன்சந்தைக்குச் சென்ற ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அந்த நபர் முடி வெட்டுவதற்காக குறித்த சலூனுக்கு வந்த நிலையில், சலூனின் உரிமையாளருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டுப்படுத்தப்பட்ட நாடாளுமன்ற அமர்வுகள்

அடுத்த மாதம் நடைபெறவிருந்த நாடாளுமன்ற அமர்வுகள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மட்டுப்படுத்தப்படவுள்ளன.

நவம்பர் மாதம் 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறாதென நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவல தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் 3ஆம் திகதி மாத்திரம் காலை 10 மணியிலிருந்து 12 மணிவரை நாடாளுமன்ற அமர்வுகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

திவுலுபிட்டிய கொத்தணியில் 661 பேர் குணமடைந்துள்ளனர்

மினுவாங்கொடை – திவுலுபிட்டிய கொரோனா கொத்தணியில் 661 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளதாக கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நேற்று வரையான காலப்பகுதியில் குறித்த கொத்தணியில் 5731 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதேவேளை, நேற்று நாட்டில் பதிவான தொற்றாளர்களில் அதிகளவானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

நுவரெலியாவுக்கு பயணக்கட்டுப்பாடு

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக மறு அறிவித்தல் வரை  நுவரெலியாவுக்கு சுற்றுலாப் பயணங்களை தவிர்க்குமாறும், இதனை மீறுபவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ்  நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  நுவரெலியா மாவட்ட செயலாளர் எம்.பி.ஆர்.புஸ்பகுமார வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

முடக்கத்தில் தளர்வு

களுத்துறை மாவட்டத்தின் மத்துகம, அகலவத்த, பாலிந்தநுவர, வலலாவிட்ட ஆகிய பிரதேச செயலகங்களுக்குரிய 12 கிராமங்கள் கடந்த 23 ஆம் திகதி முடக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சில கிராமங்களின் முடக்கங்கள் தளர்த்தப்பட்டுள்ளன.

களுத்துறை மாவட்டத்தின் மத்துகம மற்றும் பதுகம புதிய குடியிருப்புத் திட்ட கிராமங்களைத் தவிர்ந்த அனைத்து கிராமங்களின் செயற்பாடுகளும் வழமைக்கு திரும்பியுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மத ரீதியான நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடு

மத ரீதியான நிகழ்வுகளில் 50 பேருக்கும் குறைவானவர்கள் கலந்துகொள்ளுமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

நாளை பௌர்ணமி தினம் என்பதால் இந்த விடயத்தை கவனத்தில் கொள்ளுமாறும் அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

இருப்பினும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் மத ரீதியான நிகழ்வுகளை முன்னெடுக்க முடியாதென, சுகாதார மேம்பாட்டு அலுவலகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் பாலித கருணாபிரேம தெரிவித்துள்ளார்.