November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”உறுதியளிக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றுவேன்”: ஜனாதிபதி

உறுதியளிக்கப்பட்ட பொறுப்புகளை அடுத்த மூன்று வருடங்களுக்குள் நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

மொனராகலை – சியம்பலாண்டுவ மகா வித்தியாலயத்தை தேசிய பாடசாலையாக மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

பாடசாலை அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறும்போது, சகல திறமைகளுடன் கூடிய பிள்ளைகளாக அவர்கள் வெளியேற வேண்டும்.

அதற்கேற்றவாறான கல்வி முறைமை, ‘சுபீட்சத்தின் நோக்கு’ கல்வி மறுசீரமைப்பின் மூலம் நிறைவேற்றப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு பிள்ளைக்கும் தகவல் தொழில்நுட்ப அறிவை வழங்கி, தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய தொழிற்படையாக முன்னோக்கிச் செல்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டின் எதிர்கால முன்னேற்றத்துக்காக, அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ஒரு குழுவாகச் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

ஏற்படும் பின்னடைவுகளை, ஒரு குழுவாக எதிர்கொள்வது கூட்டுப் பொறுப்பாகும். அவ்வாறு செய்யாமல், குறைகளை மட்டும் விமர்சிப்பது சம்பந்தப்பட்டவரின் திறமையின்மையே ஆகுமென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன்? கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக இழந்த இரண்டு வருடங்களைப் பற்றி சிந்திக்காமல், உறுதியளிக்கப்பட்ட பொறுப்புகளை அடுத்த மூன்று வருடங்களுக்குள் நிறைவேற்றுவதற்கு ர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக, ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் பதவியை எதிர்பார்க்கிறார்கள். எவ்வாறாயினும், அரசியலமைப்பின் மூலம் வழங்கக்கூடிய 30 அமைச்சுப் பதவிகளுக்கு மேலதிகமாக எந்தவொரு அமைச்சுப் பதவியையும் வழங்கி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மீறப் போவதில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மக்களுக்காக எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு உதவுவது எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடமை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.