File Photo
இலங்கை தமிழ்க் கட்சிகளினால் இந்தியப் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள ஆவணத்தில் பலர் கையொப்பமிட்டுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் என்.சிறிகாந்தா, தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் அந்த ஆவணத்தில் கையெழுத்திடவில்லை என்றும், அவர்கள் வெளியில் இருந்து இந்த முயற்சிக்கு ஆதரவு வழங்குவதாக கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா இன்றைய தினத்தில் அதில் கையெழுத்திடவுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த ஆவணத்தின் ஊடாக 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துமாறு அவர்கள் இந்தியப் பிரதமரிடம் வேண்டுகோள் விடுக்கவுள்ளனர்.