November 23, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கான மகாராணியின் கோல் அலரி மாளிகையில்

22 ஆவது பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விழாவை முன்னிட்டு உலகளாவிய ரீதியில் 72 நாடுகளுக்கு கொண்டுசெல்லப்படுகின்ற மகாராணியின் கோலுக்கு கொழும்பு அலரி மாளிகையில் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவினால் வரவேற்பளிக்கப்பட்டது.

25ஆவது நாடாக ஜனவரி 3ஆம் திகதி இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கோல் மூன்று தினங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு நேற்று அலரி மாளிகைக்கு கொண்டு வரப்பட்டதுதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷவின் ஆலோசனையின் பேரில் இந்த கோலினை வரவேற்று காட்சிபடுத்துவதற்கான ஒருங்கிணைப்பு செயற்பாடுகளை முன்னெடுக்கும் பொறுப்பு இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவிற்கு உத்தியோகப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம் எதிர்வரும் ஜுலை 28ஆம் திகதி பிரித்தானியாவின் பர்மிங்ஹாம் நகரில் ஆரம்பமாகும் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விழாவின் உத்தியோகப்பூர்வ சின்னம் மற்றும் கோலின் மூலம் வெளிப்படுத்தப்படும் கருத்தினை பிரதமர் முன்னிலையில் முன்வைத்தார்.

அதனை தொடர்ந்து தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் சுரேஷ் சுப்ரமணியத்தினால் பிரதமரிடம் கோல் வழங்கப்பட்டது.

“2022 Queen’s Baton Relay” (QBR) என நடைபெறும் இந்த விசேட காட்சிபடுத்தல் திட்டம் பிரித்தானிய மகாராணியின் தலைமையில் கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இக்கோல் இன்றைய தினம் இலங்கையிலிருந்து பங்களாதேஷிற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

This slideshow requires JavaScript.