இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சுசில் பிரேமஜயந்த, அமைச்சில் தனது உத்தியோகபூர்வ வாகனங்களை ஒப்படைத்துவிட்டு ஆட்டோவில் வீடு திரும்பியுள்ளார்.
கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த சுசில் பிரேம ஜயந்த, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் இன்று காலை பதவி நீக்கப்பட்டார்.
அரசாங்கத்தை விமர்சித்து கருத்துகளை வெளியிட்ட காரணத்தினாலேயே அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அரச தரப்பு பிரதம கொரடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தான் பதவி நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அமைச்சு அலுவலகத்திற்கு இன்று முற்பகல் சென்ற சுசில் பிரேமஜயந்த அங்கு ஒப்படைக்க வேண்டிய ஆவணங்கள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்டவற்றை ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.
இதன்போது அவர் ஆட்டோ ஒன்றில் வீடு திரும்பினார். இவ்வேளையில் ஊடகங்களுக்கு கூறிய அவர், தன்னிடம் வாகனம் இல்லை என்றும், தனது சட்டத்தரணி தொழிலின் மூலம் புதிய வாகனத்தை கொள்வனவு செய்ய எதிர்பார்த்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.