இந்தியாவின் கடனுதவித் திட்டத்தின் கீழ் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 500 பஸ்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 35 ஆசனங்கள் கொண்ட 500 பஸ்களை கொள்வனவு செய்வதற்காக 2020 ஜனவரி 8 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
அதற்கமைய, பஸ்களை கொள்வனவு செய்வதற்காக முற்கூட்டிய தகைமைகளைக் கொண்ட 3 நிறுவனங்களிடமிருந்து போட்டி விலைமுறிகள் கோரப்பட்டுள்ளது.
குறித்த விலைமுறிகளின் மதிப்பாய்வின் பின்னர் அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கமைய இந்தியாவின் அசோக் லேலன்ட் கம்பனி ஊடாக அதனை கொள்வனவு செய்வதற்கு போக்குவரத்து அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதேவேளை பொலிஸ் விசேட அதிரடிப்படைக்கு 150 ஜீப் வண்டிகள் உள்ளடங்கலாக இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு 750 ஜீப் வண்டிகளை இந்தியாவின் கடனுதவித் திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்வதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.