November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் தொடர்பான உடன்படிக்கைக்கு அமைச்சரவை அனுமதி!

திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் தொடர்பில் தற்போது இந்திய அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள முத்தரப்பு ஒப்பந்தம் இராஜதந்திர ரீதியான கலந்துரையாடல் மூலம் மீளாய்வு செய்து கூட்டிணைந்த அபிவிருத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இருநாடுகளுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வர்த்தக நடவடிக்கைகளுக்காக 24 எண்ணெய்க் குதங்களை ஒதுக்குவதற்கும், லங்கா ஐ.ஓ.சி கம்பனியால் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் கீழ் எண்ணெய்த் தாங்கித் தொகுதியில் 14 குதங்களை குறித்த கம்பனியின் வர்த்தக நடவடிக்கைகளுக்காக ஒதுக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் எஞ்சிய 61 எண்ணெய்த் தாங்கிகளில் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 51% வீதமும், லங்கா ஐ.ஓ.சி கம்பனிக்கு 49% வீதமான பங்குரிமை கிடைக்கும் வகையில் ட்ரிங்கோ பெற்றோலியம் டேர்மினல் (பிரைவெட்) லிமிட்டட் எனும் பெயரில் நிறுவப்பட்டுள்ள கம்பனியால் அபிவிருத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் ஒப்பந்தம் செய்யப்படவுள்ளது.

இது தொடர்பில் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்படி அடுத்த வாரத்தில் இது தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.