
அடுத்த வாரத்தில் பாராளுமன்ற அமர்வை ஒரு நாளுடன் மட்டுப்படுத்துவதற்கு இன்று சபாநாயகர் தலைமையில் நடந்த பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த அமர்வின் போது ஊடகவியலாளர்களை அங்கு அனுமதிக்காது இருக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று அச்சுறுத்தல் நிலைமையை அடிப்படையாக கொண்டே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக பாராளுமன்ற ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நவம்பர் 3 ஆம் திகதி முற்பகல் 10 மணி முதல் 12 மணி வரையில் மாத்திரம் அமர்வை நடத்தவும், அன்றைய தினத்தில் சுகாதார அமைச்சரின் மருத்துவக் கட்டளைச் சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்கு விதிகளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளவும் இன்று நடைபெற்ற பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், 2020 ஆம் நிதியாண்டின் சேவைக்கு ஏற்பாடு செய்வதற்கு நிதியமைச்சரினால் முன்வைக்கப்பட்ட ஓதுக்கீட்டுச் சட்டமூலத்தை நவம்பர் 12 ஆம் திகதி இரண்டாம் மற்றும் மூன்றாம் வாசிப்புக்கு உட்படுத்தி நிறைவேற்றுவதற்கும் அந்தக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.