ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மஹா விஹாரவங்சிக கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமஸ்ரீ தர்ம மஹா சங்கசபையினால், “ஸ்ரீலங்காதீஸ்வர பத்ம விபூஷண” விருது வழங்கப்பட்டுள்ளது.
மஹா சங்கத்தினரின் ஆசீர்வாதங்களைத் தெரிவிக்கும் வகையில், இந்த கௌரவ பட்டம் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் தலைமைத்துவ நிர்வாகம், தாய் நாட்டின் மீதுள்ள பற்று மற்றும் அவரது கடந்தகாலம் முதல் தற்போது வரையான களங்கமற்ற இருப்பை அடையாளப்படுத்தும் வகையில், இன்று கோட்டே ரஜமஹா விஹாரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நிகழ்வின் போதே, கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமஸ்ரீ தர்ம மஹா சங்க சபையினால் இந்தக் கௌரவப் பட்டம் வழங்கப்பட்ட்டுள்ளது.
இதற்கான ஆவணப் பத்திரம் வாசிக்கப்பட்ட பின்னர், கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமஸ்ரீ தர்ம மஹா சங்க சபையின் மஹாநாயக்க தேரர் கலாநிதி இத்தாபான தம்மாலங்கார தேரர் இந்தப் பட்டத்தை வழங்கி வைத்துள்ளார்.
ஆசீர்வதிக்கப்பட்ட இந்தக் கௌரவப் பட்டமானது, ஜனாதிபதியின் வாழ்க்கைக்குப் பெரும் பலமாகவும் சக்தியாகவும் இருக்குமென்று, நிகழ்வின் தலைமைத்துவச் சொற்பொழிவை நிகழ்த்திய இத்தாபான தம்மாலங்கார தேரர் தெரிவித்துள்ளார்.
மஹா சங்கத்தினரின் ஆசீர்வாதம், பலம் மற்றும் தைரியம் போன்றவற்றை ஜனாதிபதிக்கு வழங்க எப்போதும் நடவடிக்கை எடுப்பதாகவும், தேரர் குறிப்பிட்டுள்ளார்.