மலர்ந்துள்ள புத்தாண்டை, மக்களுக்கான “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைத் திட்டத்தை அடைந்துகொள்வதற்காக அர்ப்பணித்து, மாற்றத்துடன்கூடிய ஆண்டாக மாற்ற அணிதிரளுவோம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மலர்ந்துள்ள புத்தாண்டு, எதிர்காலத்தைப் புதிய உத்வேகத்துடனும் நம்பிக்கை மற்றும் உறுதியுடனும் பார்க்கத் தூண்டியிருக்கிறது. அதனால், 2022ஆம் ஆண்டை, மிகுந்த ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் வரவேற்போம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் மீதும் எமது சமூகத்தின் மீதும் கடந்த ஆண்டு ஏற்படுத்தியிருந்த தாக்கத்தை நாம் திரும்பிப் பார்க்க வேண்டும். எதிர்காலப் புத்தெழுச்சிக்காக நாம் உறுதியுடன் இருக்க வேண்டுமென்று நான் நினைக்கின்றேன் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
இந்தச் சவால்களைத் தொடர்வதற்கும் வெற்றிகொள்வதற்கும், மக்களை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, புதிய ஆண்டு வாய்ப்பளிக்கும் என்று நான் நம்புகிறேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் வாழ்த்து
வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகளை அனுபவித்து, மிகுந்த வலிமையுடன் எதிர்கால சவால்களை வெற்றி கொள்வதற்கு உதயமாகியுள்ள இப்புத்தாண்டில் உறுதிகொள்வோம் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தொற்று நிலைமைக்கு மத்தியிலும் அந்த எந்தவொரு அபிவிருத்தி நடவடிக்கையையும் இடைநிறுத்தாது, மக்களின் வாழ்க்கை நிலையை கட்டியெழுப்பி அபிவிருத்தி ஒளியை முழு நாட்டிற்கும் பரப்புவதே எமது அரசாங்கத்தின் எதிர்கால இலட்சியமாகும் என கூறியுள்ளார்.
நாம் நாட்டின் பிரச்சனைகளை விமர்சிப்பவர்கள் அல்ல நடைமுறைச் சவால்களுக்கான தீர்வுகளை உங்களுக்கு வழங்குபவர்கள். அதற்காக நீங்கள் அனைவரும் எதிர்பார்க்கும் புதிய பாதை இன்று உதயமாகும் புத்தாண்டில் வெளிப்படுத்தப்படும் என்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.