புத்தாண்டையொட்டி இலங்கை முழுவதும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இன்று மாலை முதல் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக கொழும்பில் அதிகளவிலான பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாடு முழுவதும் வீதிகளில் மதுபோதையில் வாகனம் செலுத்துவோர் மற்றும் அதிக வேகத்தில் செல்வோர் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக விசேட பொலிஸ் குழுக்கள் கடமையில் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் கொழும்பு காலிமுகத்திடல், பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் சிவில் உடைகளிலும் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.